இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இது நூற்றாண்டு. அதை வெகு சிறப்பாகக் கொண்டாடிக்கொண்டிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யூ-வுக்கு, இது பொன்விழா ஆண்டு.
கம்யூனிஸ்ட் இயக்கங்களின் உயிர்நாடியே தொழிற்சங்கங்கள்தான். சி.ஐ.டி.யூ-வின் தற்போதைய மாநிலத் தலைவரான அ.சவுந்தரராஜனை சென்னை சேப்பாக்கம் சி.ஐ.டியூ அலுவலகத்தில் சந்தித்தோம். தொழிற்சங்கப் பணிகளுக்கிடையிலும் நாம் முன்வைத்த கேள்விகளுக்கு மிக நிதானமாகவும் தெளிவாகவும் பதிலளித்தார்.
சி.ஐ.டி.யூ, எப்போது... எதற்காக ஆரம்பிக்கப்பட்டது?''
''சென்னை பி அண்ட் சி மில்லில் 1918-ம் ஆண்டில் உருவான தொழிற்சங்கம்தான் அரசாங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட முதல் தொழிற்சங்கம்.
அதற்குப் பிறகு பல தொழிற்சங்கங்கள் தொடங்கப்பட்டு பதிவுசெய்யப்பட்டன. தனித்தனியாக இருந்த சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு, 1920-ம் ஆண்டு ஒரே சங்கமாக அகில இந்திய அமைப்பாக ஏ.ஐ.டி.யூ.சி உருவானது. அந்தச் சங்கத்துக்கு லாலா லஜபதிராய் தலைவராகவும், ஜவஹர்லால் நேரு பொதுச் செயலாளராகவும் இருந்தனர்.
அந்தச் சங்கம், சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் ஓர் அங்கமாகவே இருந்தது. அதே நேரத்தில்தான் கம்யூனிஸ்ட் கட்சியும் உருவானது. ஏ.ஐ.டி.யூ.சி-வில் முக்கிய பொறுப்பில் இருந்த என்.எம்.ஜோஷி, கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஆனார்.